October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் வண்டிகளை நன்கொடையாக வழங்கும் ஜப்பான்

யாழ்ப்பாணம்,மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு மறுசீரமைக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குவதற்கு ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.

கிராஸ்ரூட்ஸ் மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி மூலம் 36,759 அமெரிக்க டொலர்களை இதற்காக ஜப்பான் அரசு வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பானின் தூதர் சுகியாமா அகிரா மற்றும் மூளாய் கூட்டுறவு மருத்துவமனையின் தலைவர் எம். ஞானேஸ்வரன் ஆகியோருக்கிடையில் கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள தூதரின் இல்லத்தில் கையெழுத்தானது.

மூளாய் கூட்டுறவு மருத்துவமனை 1936 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவின் முதல் மருத்துவமனையாக கூட்டுறவு சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை மூலம் யாழ்.மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள நோயாளிகள் பல்வேறு மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்து வருவதுடன், சுமார் 200,000 மக்கள் இந்த வைத்தியசாலையூடாக சேவைகளை பெற்றுவருகிறார்கள்.

உள்நாட்டுப் போரினால் சேதமடைந்திருந்த வைத்தியசாலையின் சில வசதிகள் மீண்டும் நிர்மாணம் செய்யப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டாலும்,துணை சேவைகளில் பெரும் பகுதி கவனிக்கப்படாமல் இருக்கிறது.

2007 ஆம் ஆண்டில் மருத்துவமனை ஒன்று நன்கொடையாக பழைய அம்புலன்ஸ் வண்டியொன்றை வழங்கியிருந்தது.அந்த வண்டி தான் இதுவரை சேவையில் இருந்து வருகிறது. இந்த வண்டியை வைத்துக்கொண்டு அவசர சேவைகளை திறம்பட மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஜப்பானில் இருந்து மறுசீரமைக்கப்பட்ட இரண்டு அம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கும் இந்த திட்டம், அவசர மற்றும் மொபைல் கிளினிக் சேவைகளை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலையின் தலைவர் ஞானேஸ்வரன்;

‘எங்கள் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு இந்த இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளையும் வழங்க முன்வந்த ஜப்பான் தூதரகத்திற்கு நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த வண்டிகள் மூலம் அவசரகால சேவைகளுக்கு மூளாய் மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அல்லது அருகிலுள்ள சிறந்த வைத்தியசாலைகளுக்கு குறுகிய காலத்திற்குள் நோயாளிகளை கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.மேலும், வீட்டு வருகைகள் மற்றும் மொபைல் மருத்துவ கிளினிக்குகளை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று நம்புகிறோம்.இது தொலைதூர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு பயனளிக்கும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்த உதவுவதற்காக இந்த நன்கொடை வழங்கிய ஜப்பான் அரசுக்கு மீண்டும் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்”என்று அவர் மேலும் தெரிவித்தார்.