February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவா தீர்மானத்துக்கு அச்சமின்றி முகம்கொடுக்க அரசாங்கம் தயார்’

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிராமத்துடனான கலந்துரையாடலின் 16 ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றி ஜனாதிபதி;

´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம் அக்கறை காட்டாததால் தான் அந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல்,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் எனக்கு இப்போது ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனிவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை, எமது சுதந்திரத்தை முழுமையாக கடந்த அரசாங்கம் அழித்து விட்டது.

ஆனால் இன்று நாம் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளோம். அதனால் அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.இலங்கை ஒரு சுதந்திர நாடு. நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம்.நாங்கள் அவர்களை அச்சமின்றி எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை.

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போட்டிக்குள் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எங்களுடைய இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.