July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை ஜெர்மனி கைவிட வேண்டும்’

ஜெர்மனியில் இருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிமென் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஊடாக ஜெர்மனி அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பி, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெர்மனியில் வசித்து வரும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் வதிவிட அனுமதியைப் புதுப்பித்துக்கொள்ள அழைத்து, 100 பேர் வரையிலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை தொடர்கிறது.

இதேநேரம், இம்மாதம் 30 ஆம் திகதி சுமார் 100 பேர் வரையிலான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்படவுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு காண்பதில் இந்த வெளியேற்ற நடவடிக்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றி ஒரு வாரத்துக்குள் ஜெர்மனி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து புகலிடம் கோரி ஜெர்மனிக்கு வந்த தமிழர்களை மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது, நிலைமைகளை மேலும் மோசமாக்கும் என்றும் ஜெர்மனி அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.