
வவுனியா குளத்தின் சுற்றுலா மைய கட்டடம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி, அகற்றப்படும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொன்னாவரசங்குளம், ஈச்சங்குள பகுதியில் குளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்போது, வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுற்றுலா மையம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் திலீபன் எம்.பியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்குப் பதிலளித்த அவர், வவுனியா குளத்தினுள் கூடாரம் அமைத்தலைக் கண்டிப்பதாகவும், குளங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா குளத்தில் கட்டடம் அமைப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டதாக தெரிவித்திருந்தாலும், பிரதமர் அலுவலகம் அதனை மறுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த திட்டத்துக்கு சில திணைக்கள உத்தியோகத்தர்களும், நகரசபையும் ஆதரவாக இருப்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இவ்விடயத்தைக் கலந்துரையாடி, கட்டடத்தை அகற்றுவதற்குரிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் திலீபன் எம்.பி. தெரிவித்துள்ளார்.