September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு 2018 இல் ஏற்பட்ட 52 நாள் அரசியல் சதித்திட்டமே வாய்ப்பாக அமைந்தது’

file photo: Facebook/ Harin Fernando

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2018 இல் இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர்  தாக்குதல் தொடர்பில் பேசுவதற்னான அனைத்து உரிமைகளும் எனக்கு உண்டு. காரணம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்கு பின்னால் எனது பெயரும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது இலங்கை முழுவதற்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு இந்த நாடாளுமன்றத்திற்குள் பரிசுத்த பைபிளைக் கொண்டு வந்துள்ளேன். இந்த பைபிளின் முன் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பு என்றும் என் மதத்தை நம்புகிறேன் என்றும் நான் சொல்ல வேண்டும்

அதேபோல, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் அல்ல என்பதை நான் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றேன். இதற்காக ஸஹ்ரான் பாவிக்கப்பட்டுள்ளார்.

ஸஹ்ரானுக்கும் இந்த அரசாங்கத்துக்குமிருந்த தொடர்பு வெளிப்பட்டு வருகிறது. புலனாய்வுத் தகவல்களை வழங்குவதற்காக ஸஹ்ரானுக்கு நாங்கள்தான் சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொலைக்காட்சி உரையாடல் ஒன்றின்போது பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அப்படியெனில் 2014க்கு முன்னர் ஸஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2018 இல் இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 2018 இல் தான் வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்டனர். அதனை புலிகளின் மீது சுமத்தி மறைக்க முற்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவனெல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவமும் 2018 இல் தான் இடம்பெற்றது.

அதேபோல, ஸஹ்ரானின் நடவடிக்கையின் மோசமான நிலையை உணர்ந்து கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா, அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது, நாமல் குமார என்ற ஒருவர் திடீரென ஊடகங்களுக்கு முன்வந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுகின்றதென்ற நாடகத்தை மேற்கொண்டார்.

அதனால் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுவெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.

அத்துடன், பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்குமிடையில் பிரச்சினையும் முரண்பாடுகளும் ஏற்படுவதற்கு அரசியல்வாதிகளே காரணமாகும். இதற்கு சிறந்த உதாரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019 தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டே வெற்றி பெற்றார்.

2019 பெப்ரவரி மாதம் புல்வாமாவில் இடம்பெற்ற சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பாருங்கள். மோடி பிரதமர் தேர்தல் நடைபெற 3 மாதங்களுக்கு முன் காஷ்மீர் பயங்கரவாதிகளால் இந்திய இராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய தேர்தல் பிரசார மேடைகளில் இனவாதத்தைத் தூண்டுகின்ற கருத்துக்களை முன்வைத்தார்.

மறுபுறத்தில் அதானி மற்றும் அம்பானி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் இனவாதத்தைத் தூண்டுகின்ற வேலைகளை ஆரம்பித்தது. அதேபோல, மோடியின் பிரசாரங்களில் அவர் இராணுவ இலச்சினையை அணிந்து கொண்டு தான் மக்கள் மத்தியில் சென்றார். இராணுவத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி வாக்குகளை எடுத்து வெற்றி பெற்றார்.

இந்தப் பின்னணயில் தான் எமது ஜனாதிபதி ஏப்ரல் 12ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தார். அதேபோல, 2019 ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கோட்டாபய ராஜபக்க்ஷ  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்ற அறிவிப்பை விடுத்தார். அதனால் இதுவெல்லாம் சும்மா இடம்பெற்றதல்ல. இவையனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும் என அவர் தெரிவித்தார்.