July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகாரப் பரவலாக்கலை’ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கும்

இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகார பரவலாக்க கோட்பாட்டை’ தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று சமர்ப்பித்துள்ளது.

அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு மேலதிகமாக மாவட்ட சபை மற்றும் முன்னர் இருந்த செனட் சபை முறைகளையும் தாம் பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர், அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களையும் துறைசார் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி மேற்படி சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தல்களில் விருப்பு வாக்கு முறையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று தாம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான பிரிவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, விலங்குகள்- சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்களும் அரசியலமைப்பில் உட்சேர்க்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.