சூயஸ் கால்வாய் நெருக்கடி இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்காது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சூயஸ் கால்வாயின் ஊடாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்தின் சூயஸ் கால்வாயில் எவர்கிவன் வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டதில், கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் இலங்கையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அடுத்த எரிபொருள் கப்பல் துபாயில் இருந்தே வரவுள்ளதாகவும், அதன் பயணப் பாதைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
சூயஸ் கால்வாய் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இழப்புகளைச் சந்தித்தாலும், எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலக சந்தையில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 60 டொலர்களாக இருக்கும் போதே இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், தற்போது பீப்பாய் ஒன்றின் விலை 72 டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.