January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீன உறவுகளைக் கையாள்வதில் இலங்கையின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம்’: பங்களாதேஷ்

சீனாவுடனான உறவுகளைக் கையாள்வதில் இலங்கையின் தவறுகளில் இருந்து தாம் பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான உறவுகளைக் கையாளும் போது, தாம் மிகவும் நடுநிலைமையான முதலீட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதாக பங்களாதேஷ் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் ஜௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனைச் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால், தேசிய வளங்களின் கட்டுப்பாட்டை சீனாவிடம் கையளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இலங்கை மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளில் இருந்து தாம் படிப்பினை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிபூட்டியின் சீனாவுக்கான கடன், அந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 70 வீதத்துக்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தொட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இலங்கை குறித்த துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனா நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளதையும் பங்களாதேஷ் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் ஜௌஹர் ரிஸ்வி சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுடனான உறவை தாம் மிகவும் கவனமாகக் கையாள்வதாகவும், இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.