January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காணாமல் போனோர் விடயத்தில் சரியான தகவல்கள் இல்லை” – அமைச்சர் கெஹலிய

காணாமல் போனோர் விடயத்தில் முரண்பாடான தகவல்களே இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (02) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் மரணித்தவர்கள் தொடர்பான சில தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.

குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர். இந்த விடயத்தில் பல முரண்பாடுகள் உள்ளன.

இதனால் காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மையான அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு அறிக்கையிலும் தொகைகள் வேறுபடுகின்றன.

எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் முரண்பாடுகள் இருப்பதால் ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்றறை தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.

முதலில் தரவுகள் அடிப்படையில் உண்மையான அறிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டவை தொடர்பாகவும் அமைச்சர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட இயக்கமாகும். அவ்வாறு தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.

அதற்கு அனுமதித்தால் அது நிரந்தர சமாதானத்திற்கு தடையாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.