July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 40 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட இவர்கள் தமது படகுகள் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்தில் 54 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இவர்களில் 40 பேரை இன்று விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கையெடுத்துள்ளது.

நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடராமல் படகுடன் விடுதலை செய்து திரும்பி அனுப்புமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி திருகோணமலை மற்றும் காரைநகர் கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களையும் அவர்களது நான்கு படகுகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்து கடற்படையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது மீன் பிடி விசைப்படகுடன் இன்று மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்துள்ளனர்.