October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் ‘டிஜிட்டல் தளம்’ ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

தொழில் சந்தைக்கு ஏற்றவாறு இலங்கையின் கல்வி முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்து வரும் 3 மாதங்களில் புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ‘டிஜிட்டல் தளம்’ ஊடாக அனுப்ப முடியும் எனவும்  தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான ‘ டிஜிட்டல் தளத்தை ‘ உருவாக்குவதற்காக அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஒரு நாட்டின் சிந்தனை மற்றும் தொலைநோக்கை உருவாக்குவது அந்த நாட்டின் கல்விக் கொள்கையின் மூலம் ஆகும். காலங்கடந்த கல்விக் கொள்கையினால் உருவாகும் சமூகம், நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முடியாத சமூகம் ஒன்றாகும்.

அத்துடன், 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் அறிவை மையப்படுத்திய மனிதவள மூலதனத்தை திட்டமிட்டு போஷிப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்காக பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல ‘ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ‘ எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி  மேலும் தெரிவித்துள்ளார்.

‘அறிவையும், மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியை நோக்கி’ என்பது தான் டிஜிட்டல் தளத்தின் பிரதான கருப்பொருளாகும்.

எனவே, இன்று முதல் அடுத்து வரும் 03 மாதங்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ‘ டிஜிட்டல் தளத்துக்கு ‘ அனுப்ப முடியும்.

முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி, தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழில் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.