மக்களை கண்காணிக்கவென ‘பெகாசஸ்’ எனும் மென்பொருளை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்ணாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கனை காண்காணிப்பதற்காக ‘பெகாசஸ்’ எனும் மென்பொருளை பயன்படுத்தி வரும் அரசாங்கம், அதனூடாக அவர்களின் தனிப்பட்ட விடயங்களையும் காண்காணிக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இதன்மூலம் இன்னுமொருவரின் கைத்தொலைபேசி கமராவை இயக்க முடியும் என்பதுடன் அவர்கள் எங்கு என்பதனை கண்டறிய முடியும் என்றும் ஹரீன் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த மென்பொருள் மூலம் எதிர்க்கட்சியை ஆராய்வதை விடவும் ஆளும் கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதையே அரசாங்கம் ஆராய்கின்றது என்ற விடயத்தை தான் பொறுப்புடன் கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த மென்பொருளை பயன்படுத்தி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மோசமான செயல்களில் ஈடுபடுமாக இருந்தால், இந்த அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் பொறுப்புக் கூறியாக வேண்டும் எனவும் ஹரீன் பெர்ணாண்டோ கூறியுள்ளார்.
மக்களின் தனிப்பட்ட விடயங்களை கண்காணித்து இவ்வாறு அவர்களை கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கமான செயல் இல்லையா எனவும், அரசாங்கம் பொய், களவு, ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை என்றால் எதற்காக இவ்வாறு மக்களை கண்காணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று கேள்வியெழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.