மனிதப் பாவனைக்கு உதவாத, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் காணப்படுவதாக கூறப்படும் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்படாத 8 ஆயிரம் மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய், கடந்த 23 ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தேங்காய் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களத்தினால் எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், இவ்வாறான இரசாயனம் உள்ளடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்பிரிய உறுத்திப்படுத்தியிருந்தார்.
இதனிடையே, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்ஸிஸ் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை மனிதப் பாவனைக்கு உதவாத 13 கொள்கலன்களில் வந்த தேங்காய் எண்ணெய் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாகவும், அதனை நாட்டுக்குள் விநியோக்கிப்பதை தடைசெய்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதை அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துவகையான உணவுகளும் உணவு பாதுகாப்பு பிரிவில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நச்சுப்பொருள் கலந்த இரும்பு கொள்கலனுக்குள் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.