July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“சிங்கராஜ வனப்பகுதியில் காடுகள் அழிக்கப்படவில்லை”: இலங்கை யுனெஸ்கோ அலுவலகம்

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ இணங்கியுள்ளதாக யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

உத்தேச நீர்த்தேக்கங்கள் காரணமாக சிங்கராஜ வனத்தின் சுமார் ஐந்து ஹெக்டேயருக்கு பாதிப்பு ஏற்படகக்கூடுமென அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சிங்கராஜ வனப்பகுதியில் எந்தவிதத்திலும் காடுகள் அழிக்கப்படவில்லை என யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் செயலாளர் பேராசிரியர் புன்சிநிலமே மீகஸ்வத்தே தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

சிங்கராஜா வனத்தை உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், சிங்கராஜ வனப் பகுதிக்குள் 5 ஹெக்டெயார் நிலப்பரப்பில் இரண்டு குளங்களை நிர்மாணிப்பதற்காக கோரிக்கையொன்று யுனெஸ்கோ அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கராஜா வனம் மற்றும் அதன் இயற்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த வேலைத்திட்டத்தை கைவிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பைக் கொண்ட சிங்கராஜ வனத்தின் இயற்கைக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என பேராசிரியர் புன்சிநிலமே மீகஸ்வத்தே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பில் ஆராயும் நோக்கில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்துள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கு காடழிக்கப்பட்டு ஹோட்டல் கட்டப்படுவதாக ஒருசில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.