November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

இலங்கையில் யுத்த காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அவை பயங்கரவாத தாக்குதல்கள் என்பதனால் அதிகாரிகளுக்கு அதில் பொறுப்புக் கூறல் இருக்கவில்லை எனவும், அதேபோன்றே ஈஸ்டர் தாக்குதலையும் பார்க்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

2015 இல் ஜனாதிபதியாக தான் பதவியேற்ற பின்னர் தேசியப் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும், துரதிஸ்டவசமாக ஈஸ்டர் தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் ஐஎஸ் இயக்கத்தினால் உலக நாடுகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்ததாகவும், அது தொடர்பாக தேசியப் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடி, அது போன்ற தாக்குதல் இலங்கையில் நடப்பதை தடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூறியிருந்தாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக, அதற்கு முன்னர் புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த நிலையில், அந்த தகவல் புலனாய்வு அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டிருந்த போதும், தாக்குதல் நடந்து முடியும் வரையில் தனக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.