
இலங்கையில் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய இரண்டு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், காத்தான்குடியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மாத்தளை சேர்ந்த நபர், கடந்த டிசம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர் எனவும், இவர் வெளிநாட்டில் இருக்கும் போது இலங்கையில் அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக அங்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இணைத்தளத்தின் ஊடாக அடிப்படைவாதத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்டவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காத்தான்குடியை சேர்ந்த நபர், இணையத்தளங்களின் ஊடாக ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டவர் என்பதுடன், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரானுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியவர் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர்.