
இலங்கையில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய நச்சுப்பொருள் கலந்துள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சில இறக்குமதியானதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நச்சுப்பொருள் கலந்திருந்ததாகக் கருதப்பட்ட எண்ணெய்க் கொள்கலன்களுக்கு தரச்சான்றிதழ் பெறுவதில் மோசடிகள் நடந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தரச்சான்றிதழ் கிடைக்கும் வரை சுங்கத்துறையால் எண்ணெய்க் கொள்கலன்கள் தனியார் எண்ணெய்க் குதங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் கடமைகளுக்கான மையம் என்ற அமைப்பு தமது முறைப்பாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய்க் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘அப்லாடொக்ஸின்’ (Aflatoxin) நச்சுப்பொருள் அதிக அளவில் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணய சபை அதிகாரிகள் கண்டறிந்திருந்தனர்.
இதன்போது, சம்பந்தப்பட்ட எண்ணெய்க் கொள்கலன்களை உடனடியாக மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியிருந்தனர்.
எனினும், இலங்கை தர நிர்ணய கட்டுப்பாட்டுச் சபை குறித்த கொள்கலன்களில் உள்ள எண்ணெய்யை சுத்திகரித்து தரச்சான்றிதழை பெறுவதற்கு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து தரச்சான்றிதழ் கிடைக்கும் வரை, துறைமுகத்துக்கு வெளியே உள்ள தனியார் நிறுவனங்களின் எண்ணெய்க் குதங்களுக்கு அந்தக் கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து, எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் நடந்த சோதனையில் குறித்த எண்ணெய்க் கொள்கலன்களில் புற்றுநோய்க்குரிய நச்சுப் பொருள் இருக்கவில்லை என தர நிர்ணய சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நடைமுறை வெளிப்படைத் தன்மையுடன் நடந்திருக்கவில்லை என அனைத்திலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கமும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.