
‘இலங்கையில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகளும் தடை செய்யப்படமாட்டாது’ என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
‘நாட்டில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகளுக்கும் தடை விதிக்கப்படுமென நான் ஒருபோதும் கூறவில்லை.எந்தவொரு நாட்டிலும் ஒரு தேசிய கல்விக் கொள்கையொன்று உள்ளது.எமது நாட்டில் 5 – 16 வயது வரையான காலத்தில் தேசிய கல்விக் கொள்கையின் கீழே அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும்.
எனவே, 5 – 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாமிய மதம் மற்றும் அரபு மொழியை மாத்திரம் கற்பிக்கும் மதரஸா பாடசாலைகள் இருந்தால் அவற்றை தடைசெய்வேன் என்றே கூறினேன். இவை தேசிய கல்விக் கொள்கைக்கு முரணானதாகும்.ஆனால்,16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்வி பயிலும் மதரஸாக்கள் தடை செய்யப்படமாட்டாது.
மறுபுறத்தில், நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இஸ்லாம் மதத்தை மாத்திரம் போதிக்கும் மதரஸா பாடசாலைகள் அதிகளவில் உள்ளன. அவற்றில் மௌலவியாக விரும்புபவர்கள் கல்வி கற்க முடியும்.
ஆனால், 5 – 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் இஸ்லாமிய மதம், மற்றும் அராபி மொழியை மாத்திரம் போதிக்கும் பாடசாலைகள் தடைசெய்யப்படும். அதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.