July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர்கள் கைது விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் என்கிறது இந்தியா

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாக 54 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், மீனவர்களின் கைது குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது என்று தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல் மற்றும் அவர்களுக்கான கொன்சியுலர் மட்டத்திலான உடனடி உதவிகள் குறித்த நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கத்துதுடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இருநாட்டு மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இருதரப்பு பொறிமுறைகள் நடைமுறையில் உள்ளன எனவும், 2020 டிசம்பர் 30 ஆம் திகதி செயலாளர்கள் மட்டத்திலான கூட்டு செயலணியின் நான்காவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.