July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநா தீர்மானத்தை அமுல்படுத்த செலவாகும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம்’

இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை மீதான தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பை அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐநா தீர்மானத்தை அமுல்படுத்த அதிகமான நிதி செலவழிக்கப்படவுள்ளதாகவும், அது பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக செலவழிக்கப்பட்டால் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா பேரவை பாரிய நிதி நெருக்கடியில் இருக்கும் போது, மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை செலவழித்து பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். குடா நாட்டில் ஆயிரக் கணக்கான வீடுகளை நிர்மாணிக்கவும், யாழ்ப்பாணம் உட்பட ஏனைய பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றவும் ஐநா தீர்மானத்தை அமுல்படுத்தும் நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது, இலங்கையின் இறைமைக்கும், சுயாதீனத்திற்கும் எதிரானதுடன், நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறினால், அது குறித்து ஆராயப்படும்.

அதேபோன்று, எவரேனும் காணாமல் போயிருந்தால் அவர்கள் பிரிட்டனில் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்பது உறுதியானால், அவர்கள் குறித்தும் ஆராய முடியும்.

ஏனென்றால், பிரிட்டனில் பிரஜாவுரிமை பெற்ற நபர்களின் பட்டியலை இன்னமும் பிரித்தானியா எமக்கு வழங்கவில்லை.

எனவே, குற்றச்சாட்டுக்கள் இருப்பின் ஆதாரங்களுடன் எமக்கு முன்வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.”

என்றும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.