November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ்ப்பாணத்தை மீண்டும் முடக்காதிருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’; அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டுகோள்

‘யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா அதிகரித்துவரும் நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) கிடைத்த பி.சி.ஆர் பெறுபேறுகளின் படி சுமார் முப்பத்து ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ் நகர் பகுதியில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) 9 திருநெல்வேலி சந்தை வியாபாரிகளுக்கு தொற்று உறுதியானது.

இவர்களுடன் சேர்த்து மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை(வியாழக்கிழமை) 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 258 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். 739 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 892 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த தொற்று நிலைமையானது அண்மைய காலங்களில் மார்ச் மாதத்தில் 150 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளமை உச்சபட்ச நிலைமையாகும்.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய காலகட்டம் இது.

தற்பொழுது பாடசாலைகள் மற்றும் ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன.
பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பும் போதும் மிகவும் அக்கறையுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனுப்புதல் சாலச் சிறந்தது.

அதே போல, அரச தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பையும் பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

சமூக இடைவெளி பேணுதல், முகக் கவசம் அணிதல் போன்ற அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தம்மையும் தமது குடும்பம் மற்றும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீடுகளிலிருந்து வெளியேறுவதைத் தவிர்ப்பதுடன், போக்குவரத்தின் போதும் ஏனைய செயற்பாடுகளின் போதும் அனைவரும் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுதல் வேண்டும்.

குறிப்பாக பொது நிகழ்வுகள், ஏனைய கூட்டங்களின் போது மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளை அனுசரித்து பொது சுகாதாரப் பரிசோதகர்களின், பொது வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் தொற்று மூலங்கள் இனங்காணப்படுகிறது. எனவே இது ஒரு சமூக தொற்றாகக் கருத முடியாது. ஏற்கனவே சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி அமுல்படுத்தினால் தொற்று நிலைமையிலிருந்து யாழ். மாவட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். தற்போதைய நிலைமை ஏனைய மாவட்டங்களை விடவும் சற்று வித்தியாசமாக உள்ளது.

எனவே இந்த விடயத்தில் சுகாதார தரப்பினருக்குப் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பெரும் தொற்று ஏற்படும் நிலைமையானது மீண்டும் முடக்கத்தினை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டுசெல்லும்.

இது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.எனவே தொற்றினை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் முடக்க நிலைமையை கட்டுப்படுத்தி தொற்று நிலைமையிலிருந்து யாழ் மாவட்டத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.