மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில், கன்னி சதத்தைப் பதிவுசெய்து வரலாறு படைத்தார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அன்டிகுவாவில் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி. தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைக் குவிக்க, பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை எடுத்தது.
இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான நேற்று 255 ஓட்டங்களுடன் போட்டியை ஆரம்பித்த இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 476 ஓட்டங்களை குவித்தது.
நேற்றைய ஆட்டநேரத்தின் முதல் ஓவரில் அரைச் சதத்தைக் கடந்த தனன்ஜய டி சில்வா ஆட்டமிழந்த போதும், 6ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஜோடி அபாரமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.
இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்காக 179 என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை பகிர்ந்து இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தினர்.
இதற்கிடையில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் 22 வயதான பெதும் நிஸ்ஸங்க முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார்.
அறிமுக போட்டியில் சதம் அடித்த இலங்கை வீரர்களான ப்ரெண்டன் குருப்பு, ரொமேஷ் களுவிதாரன மற்றும் திலான் சமரவீர ஆகியோரின் பட்டியலில் நான்காவது வீரராக பெதும் நிஸ்ஸங்க இணைந்துகொண்டார்.
இறுதியாக 2001 ஆம் ஆண்டில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் திலான் சமரவீர இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
அதன்பிறகு சுமார் 20 வருடங்களின் பின்னர், அன்டிகுவாவிலுள்ள சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் 270 பந்துகளுக்கு முகங்கொடுத்து பெதும் நிஸ்ஸங்க தனது முதல் சதத்தை பதிவுசெய்தார்.
இதில் திலான் சமரவீர இந்த சாதனையை நிகழ்த்தும்போது பெத்தும் நிஸ்ஸங்க 3 வயது சிறுவனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, மேலே குறிப்பிட்ட வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த மண்ணில் இந்த சாதனையை பதிவுசெய்திருந்த போதும், பெதும் நிஸ்ஸங்க வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் 110 ஆவது வீரராகவும் பெதும் நிஸ்ஸங்க இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பெதும் நிஸ்ஸங்க சதமடித்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய நிரோஷன் டிக்வெல்லவுக்கு கன்னி டெஸ்ட் சதத்தைக் குவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், துரதிஷ்டவசமாக 96 ஓட்டங்களுடன் அவர் விக்கெட்டினை பறிகொடுத்தார்.
இதனிடையே, தனது அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த பெதும் நிஸ்ஸ்ஙகவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மஹேல ஜயவர்தன வாழ்த்து
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, ‘கடந்த மூன்று ஆண்டுகளாக முதற்தர கிரிக்கெட்டில் 67 ஓட்டங்களை சராசரியாக கொண்டிருந்ததுடன், இறுதியாக கிடைத்த வாய்ப்பில், கடினமான சதம் ஒன்றை பெற்றுக்கொண்ட பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாழ்த்துக்கள்’ என தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசல் ஆர்னல்ட் வாழ்த்து
இலங்கை அணியில் விளையாடுவதற்கு முன்னணி கழகங்கள் தேவையில்லை எனவும், ஓட்டங்களை குவிப்பதும் விக்கெட்டுகளை கைப்பற்றுவதுமே தேவையான விடயம் எனவும் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெரட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் பதிவிட்டுள்ளதுடன், பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
அவர் பெதும் நிஸ்ஸங்கவுக்கான தனது வாழ்த்தில், ‘வாழ்த்துக்கள் பெதும் நிஸ்ஸங்க. தொடர்ந்து ஓட்டங்களை குவிக்க வேண்டும். இதுபோன்ற பல சதங்களை குவிக்க முடியும் என நம்புகிறேன்’ என வாழ்த்தியுள்ளார்.
மற்றுமொரு டுவிட்டர் பதிவில், ‘மலை போன்ற ஓட்டக்குவிப்புக்கு பின்னர், பலமான தன்மையை வெளிப்படுத்தும் பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாழ்த்துக்கள். இலங்கை அணியில் விளையாட வேண்டும் என்றால் ஓட்டங்களை குவித்தும், விக்கெட்டுகளை கைப்பற்றியும் தாங்களை நிரூபிக்க வேண்டும். ஏனைய கழகங்களுக்கு சென்று நிரூபிக்க வேண்டியதில்லை. எனவே, தொடர்ந்தும் பெதும் நிஸ்ஸங்க NCC கழகத்தில் விளையாடுவார் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
டொம் மூடி வாழ்த்து
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி, பெதும் நிஸ்ஸங்கவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மேலும் இதுபோன்ற சதங்களைப் பெறவேண்டும் எனவும், இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று இரவு (25) நடைபெறவுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு 341 ஓட்டங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.