இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்த போதிலும்,புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதில் அரசாங்க ஊழியர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சம்பளங்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதால் புத்தாண்டுக்காக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு செல்கின்ற போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுள்ளார்.
ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஆடை விற்பனை நிலையங்களுக்கு செல்கின்ற போது ஆடை விற்பனை உரிமையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு, ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடைகளுக்கு முன்னால் சுகாதார வழிமுறைகளை மக்களை கடைப்பிடிக்க செய்வதற்கு பொறுப்பான ஒருவரை நியமிப்பதோடு, கை தொற்று நீக்கியை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக சகல சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாத ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்படுவதோடு, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புத்தாண்டு பொருள் கொள்வனவுகளை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை தக்கவைத்துக்கொள்ளவும் முகமூடி அணிவது மற்றும் கைகளைக் கழுவுவதை மக்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், அது அவர்களின் குடும்பங்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா பரவலைக் குறைக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.