தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் சரத் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பிலேயே இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக முரளிதரன் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்ததாகவும், அதனால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் வெலிகந்தை பகுதியில் அரசாங்கத்திடமிருந்து சட்டமுரணாக 2000 ஏக்கர் காணியை பெற்றுள்ளதாகவும் அங்கே யானைகள் உலாவும் இடங்களை மறித்து வேலி போட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்தில் உண்மை இல்லை எனவும், அது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனவும் முரளிதரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கருத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக ஒரு பில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டுமென முரளிதரன் கோரியுள்ளார்.
7 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்காவிட்டால் நீதிமன்றில் அவதூறு வழக்குத் தொடர நேரிடும் எனவும் சட்டத்தரணி ஊடாக முரளிதரன் சரத் பொன்சேகாவிற்கு அறிவித்துள்ளார்.