யாழ்ப்பாணம் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக பல வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு பச்சை மிளகாய், குடை மிளகாய், உள்ளூர் உருளைக்கிழங்கு, பீட், பூசணிக்காய் மற்றும் சிவப்பு வெங்காயம் போன்ற பல மரக்கறிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்பு 100 ரூபாவாக இருந்த ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை தற்போது 70 முதல் 80 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயத்தின் விலை 450 முதல் 500 ரூபா வரை குறைந்துள்ளது.
அத்தோடு 200 முதல் 220 ரூபா வரை விற்கப்பட்டு வந்த பச்சை மிளகாயின் விலையும் 130 முதல் 140 ரூபாவாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பூசணிக்காய்களும் 50 முதல் 55 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகளின் பெருந்தொகை கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளதனால் காய்கறிகளின் விலை மேலும் குறைவடையும் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, சந்தையில் யாழ்ப்பாண மரக்கறிகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலையை விடவும் யாழ். உற்பத்திகளின் விலை குறைவாக இருப்பதால், பண்டிகை காலங்களில் நுகர்வோருக்கு சலுகை விலையில் மரக்கறிகளை வழங்க முடியும் எனவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.