July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை மீதான ஐநா தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றி’- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வெற்றியாகும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

‘இலங்கை மீதான தீர்மானத்துக்குப் பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஐநா உறுப்பு நாடுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்த வேண்டும்’ என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்க, பகுப்பாய்வு செய்ய மற்றும் பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த பொறுப்புக்கூறல் நடைமுறையை நிறுவுகின்றதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதி மறுக்கப்படும் போது, கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறலை நிறைவேற்ற ஐநா முன்னிற்கும் என்பதையே இலங்கை மீதான தீர்மானம் காட்டுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சிறுபான்மையினரின் மத உரிமைகள் மதிக்கப்படுவதற்கு ஐநா உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அழைப்பு விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைகளுக்கு அமைய கடுமையான குற்ற மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது தடைகளை விதிப்பதற்கும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கேட்டுக்கொண்டுள்ளது.