July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இந்தியாவின் கொவிட் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தம் இலங்கையை பாதிக்காது”: இராஜாங்க அமைச்சர் ஜயசுமன

‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பாக அமையாது என்று மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்திருந்தாலும், இலங்கைக்கான விநியோகம் நிறுத்தப்படாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசிக்கான கேள்விகள் அதிகரித்துள்ளமையினாலும், இந்தியாவிற்கு அதிகளவிலான தடுப்பூசிகள் தேவைப்படுவதாலும் வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்பார்த்திருந்த நாடுகள் பல மேலும் ஒரு மாதத்திற்கு காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் ‘அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசியின் முதலாவது டோஸ் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி முதல் செலுத்தப்பட்டதுடன், இரண்டாவது டோஸை செலுத்தும் பணி ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவினால் ‘அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமான நிறுத்த எடுத்துள்ள தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று வெளியாகும் தகவல்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் இலங்கைக்கு தடுப்பூசி தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் எனவும், இதனால் இலங்கையில் இரண்டாவது டோஸை செலுத்தும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 12 இலட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகளில் ஒரு தொகை கையிருப்பில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கையில் 8 இலட்சத்தும் 56 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.