ஐநா மனித உரிமைகள் பேரவையில் தோல்வியடைந்த நிலையிலும், இலங்கை அரசாங்கமும் வெளியுறவு அமைச்சரும் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பது மோசமான நிலைமையாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஒருபோதும் அதன் தவறுகளைச் சரிசெய்துகொண்டு, ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெற்றிபெற மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் ஏற்பட்ட தோல்வி, ‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாது’ என்பதை நிரூபித்துள்ளதாகவும் ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே ஒப்புக்கொள்கின்றதாகவும் பிமல் ரத்நாயக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அல்லது அதன் மக்களை நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஐநாவில் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவ்வாறு நாட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், இந்த விடயங்களில் போராட்டம் நடத்தும் தேரர்கள் போராட்டங்களில் குதித்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.