தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகளை,தேசிய நல்லிணக்கத்தின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கோடு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் காலப் போக்கில் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான அரசியல் சூழல் என்பவை, தேசிய நல்லிணக்கமே இப் பிரச்சினைகளை தீர்த்து கொள்ளவதற்கான சிறந்த வழிமுறை என்ற யதார்த்தத்தினை புரிய வைத்துள்ளது.
எனினும், யதார்த்தத்தினை புரிந்து கொள்ளாது சில ஊடகங்கள் தவறாக மக்களை வழிநடத்தியிருந்தமையும், எமது மக்கள் எதிர்கொண்ட பல்வேறு துன்பங்களுக்கான காரணங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது.
இந்நிலையில், எதிர்காலதத்திலாவது ஊடகங்கள் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். மெய்பொருள் காண்பதை இலக்காக கொண்டு ஊடகங்கள் செயற்படுவதுடன், குறித்த மெய்ப்பொருளை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் நேர்மையாக செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.