July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை சந்தையில் புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் உள்ளதா?; அரச தரப்பு பதில்

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அரச தரப்பு எம்.பி மொஹமட் முஸம்மில், புற்றுநோயை ஏற்படுத்தும் எப்போலடெக்ஸின் மூலக்கூறுகள் அடங்கிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

இதனை சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவும் தெரிவித்துள்ளதுடன், இந்த எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்யுமாறும் கோரியுள்ளது. ஆகவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பந்துல, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடலுக்கு பாதகமான தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் இதுவரை எவ்வித முறைப்பாடுகளையும் அளிக்கவில்லை.

எனினும் , உடனடியாக இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதகமான தேங்காய் எண்ணெய் சந்தையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஊடகச்சந்திப்பை நடத்திய தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவ்வாறு எண்ணெய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்  தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள போதிலும்,  சுத்திகரிக்கப்படாத 8 ஆயிரத்து 300 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய், கொழும்பு துறைமுகத்தில் இருந்து சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.