January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவா தீர்மானம்:இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை’; ஐக்கிய மக்கள் சக்தி

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற்றுள்ளதன் மூலமாக இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர்,எனவே உள்நாட்டு விசாரணையை நடத்தியேனும் தீர்வை காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி யுள்ளனர்.

மேலும்,வெளிநாட்டு பயணத்தடை, பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள், ஏற்றுமதி -இறக்குமதி விடயங்களில் தடைகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘சர்வதேச விசாரணை அவசியமில்லை. ஆனால், உள்நாட்டு விசாரணைகளை நடத்தியேனும் தீர்வு காணுங்கள்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த வாக்கெடுப்பு மூலமாக எமக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

‘இராஜதந்திர ரீதியிலும், வெளிநாட்டு நட்புறவிலும் நாம் தோற்றுள்ளோம் என்ற எச்சரிக்கை இதன் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.கொவிட் -19 காரணமாக பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள நாம் தற்போது சர்வதேச இராஜதந்திர ரீதியிலும் பலவீனம் கண்டுள்ளோம்.

இலங்கையின் பிரஜைகளை வெளிநாட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தவும் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை ஏற்படுவதற்கும் நாம் விரும்பவில்லை.

இலங்கையின் பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள், ஏற்றுமதி -இறக்குமதி விடயங்களில் எந்தவொரு தடையும் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால் நேற்று வாக்கெடுப்பின் பின்னர் இந்த காரணிகள் அனைத்துமே சவாலுக்கு உட் படும் விடயமாக மாறியுள்ளது.

நாம் என்ன செய்ய வேண்டும் என வெளிநாட்டவர் எமக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் தேசிய ஆணைக்குழுக்களின் மூலமாக பொறிமுறை ஒன்றினை உருவாக்குவோம். உள்ளக பொறிமுறை மூலமாக நாம் சரியாக செயற்பட்டால் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படும்’ எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து எதிர்க்கட்சி பிரதம கொற டாவான லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில்,

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு பலவீனப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடையவில்லை, உண்மையில் எமக்கு வேதனையே ஏற்பட்டது.

எமது நல்லாட்சி காலத்தில் எமக்கு எதிராக எந்தவொரு பிரேரணையும் கொண்டுவரவும் இல்லை.நாம் வாக்கெடுப்புகளில் தோற்கவும் இல்லை. அரசாங்கம் இந்தியாவின் பின்னால் சென்று மேற்கு முனையத்தை வழங்கியும் கூட அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது’ எனவும் அவர் தெரிவித்தார்.