(Photo : buddhistdoor.net)
அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் மறைவையொட்டி நாளை (வியாழக்கிழமை) தேசிய துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.
அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் காலஞ்சென்ற கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்ததையடுத்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இறைச்சிக்கடைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளன.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர், தனது 88 ஆவது வயதில் காலமானார்.
கல்கிசை தர்மபாலாராமய விகாரையில் தலைமை பதவியை வகித்த இவர் புத்த சாசனத்திற்கு சேவையாற்றி வந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் அமரபுர பீடத்தின் மகாநாயக்கராக நியமிக்கப்பட்ட இவருக்கு 2007 ஆம் ஆண்டில் மியான்மார் அரசு “அகமஹபாண்டிதர்” பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.