
ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது நெருக்கமான கண்காணிப்பு நடைமுறையை உடனடியாக ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள அதிகாரிகளைக் கொண்டு இந்த கண்காணிப்பு நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், ஐநா பொதுச் சபையில் நிதி ஒதுக்கீட்டு அங்கீகாரம் கிடைத்ததும் முழுமையான திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
புதிய தீர்மானத்துடன் ஐநா ஆணையாளரின் அலுவலகம் இலங்கையில் மேலும் 12 அதிகாரிகளை பணியில் அமர்த்தவுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதி தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட ஆலோசகர்கள், விசாரணையாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஐநா அதிகாரிகளில் உள்ளடங்குகின்றனர்.
இதேநேரம், புதிய தீர்மானம் இலங்கையில் உடனடியாக தாக்கம் செலுத்தாவிட்டாலும், தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ள 40 க்கும் அதிகமான நாடுகளின் வர்த்தக மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீதான புதிய தீர்மானத்தை அமுல்படுத்த 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் இந்தத் தொகை உள்ளடங்குவதில்லை என்றும் ஐநா நிகழ்ச்சித் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஜொஹன்னஸ் ஹ_ய்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூலமாகவும், 49 ஆவது அமர்வில் எழுத்து மூலமாகவும் அறிவிக்க வேண்டியுள்ளதோடு, 51 ஆவது அமர்வில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.