January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தீர்மானத்தில் குறிப்பிடாவிட்டாலும் இலங்கை சர்வதேசத்துக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது’: சார்ல்ஸ் நிர்மலநாதன்

ஜெனிவா தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற வசனம் இல்லை என்றாலும் கூட இலங்கையில் 2009 ஆம் ஆண்டும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் பொறுப்புக்கூறும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்ட நிலையில், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுயமாக வாழ வேண்டும் என்பதற்காகவே தாம் சர்வதேச விசாரணைகளைக் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற சொல் நீக்கப்பட்டபோதிலும், சர்வதேசத்துக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இன்று சீனாவின் மாநிலமாகவும், பங்களாதேஷத்திடம் கடன் கேட்கின்ற நிலையிலும் உள்ளதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இது நாட்டை சோமாலியா போன்ற நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் ஐநா தீர்மானத்தில் இல்லாவிட்டாலும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவந்த பிரித்தானியாவுக்கும், அதற்கு ஆதரவு வழங்கிய, நடுநிலை வகித்த நாடுகளுக்கும் சார்ல்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.