இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இருக்கின்ற நிலையில் அவர்களின் மூலமாகவே பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வலியுறுத்தும் பிரேரணையே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான பிரேரணை ஒன்றினை கேட்டு அரசாங்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுத்துள்ளது. எனவே தமிழ் மக்கள் முகங்கொடுத்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் பயணத்தில் மீண்டும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்த் தரப்பாக நாம் இந்த பிரேரணையை நிராகரிக்கின்றோம்.இந்த பிரேரணை மிகவும் பலவீனமானதாகும்.
இவ்வாறான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது மூலமாக இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை விடயத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படப்போவதில்லை.
அரசாங்கம் குற்றம் சுமத்தப்பட்ட தரப்பாக இருக்கின்ற நிலையில், அவர்களின் மூலமாக ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு எவ்வாறு தீர்வு காண முடியும்?
2015 ஆம் ஆண்டு 30/1 பிரேரணை உள்ளக விசாரணை முறைமையை வலியுறுத்திய போதும் அதில் குறைந்தபட்சம் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், ஆய்வாளர்கள் இந்த பொறிமுறையில் தலையிட வேண்டும் என்றேனும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் 46/1 பிரேரணை அவை எதுவுமே இல்லாது உள்ளக பொறிமுறையை மட்டுமே வலியுறுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் உள்ளக விசாரணைகளை நடத்துவோம் என கூறியதையே இந்த பிரேரணையும் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் வெறுமனே கால அவகாசத்தை வழங்கி மீண்டும் பொறுப்புக்கூறலை தாமதப்படுத்தியுள்ளதே தவிர,பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் பாரிய காட்டிக்கொடுப்பை செய்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.