கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க இன்று தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அங்கு தொல்பொருள் அகழ்வு திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மக்கள், இன்று அங்கு வந்த அதிகாரிகளை கோயில் வளாகத்திற்குள் செல்லவிடாது, கோயிலின் பிரதான வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அங்கு சென்றிருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனபோதும், அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தமது போராட்டத்தை தொடர்ந்த நிலையில் இன்று நடத்தப்படவிருந்த அகழ்வுப் பணிகளை இடை நிறுத்திய அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.