
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் கறுப்புப் பண மோசடி குற்றச்சாட்டில் 29 வயதான நபர் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் தனியார் வங்கி கணக்கில் ரூ. 17.2 மில்லியன் ரூபா அமெரிக்காவிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பணம் இவ்வாறு குறித்த நபரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2020 ஏப்ரல் மாதம் முதல் சந்தேக நபரின் பெயரில் 140 மில்லியன் ரூபா பல வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில், ஏப்ரல் 2020 முதல் கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்ட 36 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பண மோசடியுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.