இலங்கையின் அரசியல் தரப்புகள் உட்பட அனைவரும் ஐநா தீர்மானத்தை குறுகிய கால அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக அன்றி, மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, உலகத் தமிழர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஐநா தீர்மானத்தைப் புறக்கணிப்பதானது, சர்வதேச சமூகத்தில் இருந்து நாட்டைத் தனிமைப்படுத்திக் கொள்வதாகும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மீதான தீர்மானம் குறைந்தபட்ச எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்டமை, இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் அடையாளம் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கிய நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு வாக்களித்துள்ளதாகவும், பாரம்பரியமாக இலங்கையை ஆதரித்து வந்த நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
‘மனித உரிமைகள் மீறப்படும் ஆபத்தான பாதையில் இலங்கை மீண்டும் பயணிக்கின்றது’ என்ற மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை சிறந்த விளைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஐநா பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாக இந்தியா அதன் அதிருப்தியை வெளியிட்ட பின்னரே, வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொண்டதாகவும், தமிழ் மக்கள் சார்பாக தாம் இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.