July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையொன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது”

ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தாலும், இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைவாக செயற்படுத்தப்படும் வகையில் தேசிய பொறிமுறை ஒன்றினை அரசாங்கம் உருவாக்கி உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று, எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக கையொப்பமிட்டதால் வெளிநாட்டு சக்திகளிடம் நாடு கட்டுப்பட்டு இருந்ததாகவும், அதிலிருந்து விடுபட்டுக்கொள்ள மக்கள் ஆணையொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது அரசியல் அமைப்பிற்கு அமைய செயற்படும் விதமாக, பொறுப்புக் கூறல் விடயத்தில் தேசிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கியுள்ளதாகவும், இது குறித்த நீண்ட பதிலை நாளைய தினம் சபையில் முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.