உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 13 ஆவது அர சியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாண சபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் முன்வைக்கப்பட்ட யோசனையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளைச் சட்டங்களான மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் போன்றவற்றை திருத்துவதற்காக சட்டவரைஞரால் குறித்த சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
குறித்த சட்ட மூலத்தில் மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, குறித்த திருத்தங்கள் உள்ளடங்கலாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் திருத்தியமைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 154(எ) உறுப்புரைக்கமைய மாகாண சபைகளின் நிலைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.