ஜெனிவா தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கக் கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று கருத்துக்கள் வெளியாவது குறித்து, இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க முடியாது என்றும், அது தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபையிலேயே தீர்மானிக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பொருளாதார தடை வரையில் இந்த விடயம் கொண்டு செல்லப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்புச் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் இருக்கும் நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட ரீதியில் பொருளாதார தடைகள் குறித்து நாடுகளுக்கு தீர்மானம் எடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது மனித உரிமைகள் பிரகடனத்திற்கு முரண்பாடானது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பதிலளிப்பதற்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் என்றும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.