மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியை இடமாற்றும் தீர்மானத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பாடசாலையின் அதிபர் கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், திடீரென அவர் வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றப்பட உள்ளதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் வலயக் கல்வித் திணைக்களத்தினால், எதிர்வரும் 2 ஆம் திகதி அருட்சகோதரி வங்காலை பாடசாலையை பொறுப்பேற்பதற்கான இடமாற்றக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பாடசாலைக்கு முன் ஒன்று கூடிய பெற்றோரும் பழைய மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது பாடசாலை மாணவர்களும் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க, முருங்கன் கலகம் அடக்கும் பொலிஸார் முயன்ற வேளையில் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
அந்த இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் திரு.பிறட்லி, ஆயர் இல்லத்துடன் கலந்துரையாடுமாறு பெற்றோருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் அறிவுறுத்தினார்