யாழ்ப்பாணம் நகரிலுள்ள மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தையில் எழுந்தமானமாக 60 பேரிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 9 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே சந்தைத் தொகுதியை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள வியாபாரிகளில் 6 பேர் பனை உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் வியாரிகள் எனவும் மற்றைய மூன்று பேரும் மரக்கறி வியாபாரிகள் எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த சந்தையில் மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மூடப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்குள்ள அத்தனை வியாபாரிகளும் மற்றும் பணியாற்றுபவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.