January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நடுநிலை வகித்த இந்தியாவுக்கு மூன்று காரணங்களுக்காக நன்றி’; சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்த இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ஐ.நா. தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளே சர்வதேசத்தின் நிலைப்பாடு.இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும். தீர்மானத்தைக் கொண்டுவந்த பிரிட்டன் உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளுக்கும், தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கும் தமிழ் மக்களின் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்.

மேலும்,வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்த இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று ஜெனிவாவில் தெரிவித்தமைக்காகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தமைக்காகவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியமைக்காகவும் இந்தியாவுக்கு மூன்று வகைகளில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.