November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா நடுநிலை வகித்தாலும் அரசியல் தீர்வு விடயத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளது’

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தாலும்கூட தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் அதிக சிரத்தை கொண்டு இந்தியா செயற்படுகின்றது”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மான விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்தாலும்கூட அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் ஒரு தெளிவான அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமத்துவத்தின் அடிப்படையில்,நீதியின் அடிப்படையில்,கெளரவத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை இந்திய மத்திய அரசு வலியுறுத்தியிருக்கின்றது.

இதை நிறைவேற்றுவதற்கு இந்தியா இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கருமத்தில் எங்களுடைய ஒத்துழைப்பும் பரிபூரணமாக இருக்கும்.

மேலும்,பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் அரசியல் தீர்வு போன்ற கருமங்களை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விதமான கருமங்கள் நடைபெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.எமது முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்குவோம்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ள இந்தத் தீர்மானம் ஒரு நல்ல தீர்மானம்.இதை நாங்கள் வரவேற்கின்றோம்.

தீர்மானத்திலுள்ள பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுதான் முக்கியம்.பிரேரணையைக் கொண்டுவந்த நாடுகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும், பிரேரணை தீர்மானமாக நிறைவேற அதை ஆதரித்த நாடுகளும் ஒன்றுசேர்ந்து தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.