July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“முன்னைய தீர்மானங்களை விட இது வலுவற்றது”: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக அரங்கொன்றில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதென ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’
அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’
அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 2015 இல் இலங்கை அரசாங்கம் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தோல்வியானது, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் இலங்கை ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தில் முன்மொழியப்பட்டிருந்த போதும், இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் பொறிமுறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.