April 22, 2025 22:12:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா: விரைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை

இலங்கையில் விரைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை தாம் ஆதரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 14 நாடுகள் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பது நாடுகளின் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ள இந்தியா, அத்தகைய விடயங்களுக்கு ஆக்கபூர்வமான சர்வதேச உரையாடல்களும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியா, இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதிலும் தாம் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னேற்றத்தில் மேற்படி இரண்டு குறிக்கோள்களுக்கும் பரஸ்பரம் ஆதரவளிக்கவுள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.