வடக்கில் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும் மாற்றியமைக்கும் விதமாக பெரும்பான்மையினத்தவர்களுக்கு காணிகள் வழங்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுங்கக்கட்டளை சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர்;
பளைப் பகுதியில் உள்ள காணி சீர்திருத்தக் குழுவின் காணிகள் அந்த பிரதேசத்தையோ அல்லது வடக்கை சாராதவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வெளி மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பொலிஸாருக்கு 5 ஏக்கர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் காணிகள் இல்லாமல் இருக்கின்றபோது இவ்வாறு அந்த பிரதேசத்தின், மாகாணத்தின் இன விகிதாசாரத்தை, இனப்பரம்பலை, மாற்றியமைக்கும் விதமாக இந்தக்காணிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்படுவதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
குறித்த பிரதேச செயலாளருக்கும், அங்குள்ள அதிகாரிகளுக்கும் தெரியாமல் அனுராதபுரத்திலிருந்து வந்த முடிவுகளின் அடிப்படையிலேயே வடக்கின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்த செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு முறைகேடான முறையில் வழங்கப்பட்ட காணிகள் மீண்டும் திரும்ப பெறப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.