சர்வதேச நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் கொண்டிருந்த முரண்பாடான கொள்கையே ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படக் காரணமாக அமைந்துள்ளது என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம், இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வராதவாறு சர்வதேச நாடுகளுடன் நற்புடன் நடந்துகொண்ட போதும், தற்போதைய அரசாங்கம் சில நாடுகளுடன் மாத்திரம் கைகோர்த்துக்கொண்டு மற்றைய நாடுகளுடன் முரண்பாடான கொள்கைகளையே பின்பற்றுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஜெனிவாவில் இலங்கை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றும், இது நாட்டுக்கு அபகீர்த்தியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளினால் பொருளாதார தடைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படக் கூடுமென லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.