
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அரசாங்கமும், தொழில் கம்பனிகளும் ஒன்றிணைந்து மக்களை ஏமாற்றும் நாடகமொன்றை அரங்கேற்றி வருவதாவும், இதுவொரு கூட்டு சதியெனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.
தேர்தலில் வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டும், தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை அல்லது இயலாமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இதனால் பெருந்தோட்டங்களை நிருவகிக்கும் வெறும் 20 நிறுவனங்களினால் இந்த அரசாங்கம் ஆட்டுவிக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது என்றார்.
ஆயிரம் என்பதை காட்டி தொழில்துறையை அழித்துவிடும் செயலை செய்துவிட வேண்டாம் எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.